க.பொ.த உயர்தரம் 2016
தமிழ் மாதிரி வினாத்தாள் 1
அறிவுறுத்தல்கள்: பகுதி I இல் உள்ள இரு வினாக்களுக்கும், பகுதி II இல் உள்ளவற்றுள் எவையேனும் மூன்று வினாக்களுக்கும் எல்லாமாக ஐந்து வினாக்களுக்கு விடைதருக
பகுதி I
1. மேல்வரும் செய்யுள்களை வாசித்து அவற்றின் கீழ் உள்ள வினாக்களுக்கு விடை தருக.
( ஐ) பாணன் சூடிய பசும்பொற் றாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர்
யாரீ ரோவென வினவ லானாக்
காரெ னொக்கற் கடும்பசி யிரலவ
வென்வே லண்ணற் காணா வூங்கே
நின்னினும் புல்லியே மன்னே யினியே
இன்னே மாயினே மன்னே யென்றும்
உடாஅ போரா வாகுத லறிந்தும்
படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை யாயினு மீத்த னன்றென
மறுமை நோக்கின்றோ வன்றே
பிறர், வறுமை நோக்கின்றவன் கைவண்மையே.
அ) பாடலின் பொருளை இக்கால உரைநடையில் எழுதுக.
ஆ) தடித்த எழுத்துக்கள் உள்ள பகுதிகளின் சிறப்பை எழுதுக.
இ) பாடாண்திணைமரபை இப்பாடல்வழி எடுத்துக்காட்டுக.
ஈ) இப்பாடலின் துறையை விளக்குக.
(II) அலைபுறங் கொண்ட ஞாலத் தடரிருள் சீக்க யாக்கை
நிலைபுறங் கொண்ட ஞானநெடுஞ் சுடரனையான் போகக்
கொலைபுறங் கொண்ட வேந்தன் குணத்துரி நகரும் நாடும்
வலைபுறங் கொண்ட பாவ மலிந்திருள் மொய்த்தன்றே
கதிதள்ளி யுயர்வான் னேற்றங் கனிந்ததம் வேந்த னோடு
பதிதள்ளி யமரர் போகப் பகையுநீண் பசியு நோயும்
நிதிதள்ளி மிடியுங் கேடு நிசிதமுந் தீயயாவு
மதிதள்ளி மருட்டும் பேயு மறுகுடி யாயிற் றன்றே
அ) இப்பாடல்கள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தை விளக்குக.
ஆ) பாடல்களின் பொருளை எழுதுக.
இ) நகரம் அடைந்த துன்பத்தை விளக்குக.
2. 'அ' பகுதியிலுள்ள கவிதையைப் படித்து அதன் கீழுள்ள வினாக்களுக்கு விடை தருக.
அல்லது
'ஆ' பகுதியிலுள்ள உரைப்பகுதியைப் படித்து அதன் கீழுள்ள வினாக்களுக்கு விடை தருக.
(அ)
பத்தாத் திகதியில் சம்பளமாம் சின்னப்
பையனுக்கோ பெருங் கொண்டாட்டம்
'மொத்த மாக சம்பளம் வாங்கிடுவா அம்மா
முழுசா ஒருரூபா தந்திடுவா' என
சித்தம் நிரம்பிய ஆசையிலே தன்
தோழர் பலருக்கும் சொல்லி வைத்தான்
முத்தம்மா சம்பளம் வாங்கி வந்தாள் - அவன்
முதுகுல நாலு கொடுத்து வச்சாள்
வாழைப்பழம்... மிட்டாய், முறுக்கு வடை
வாங்குங்கிட வாங்குங்க என்று இந்த
ஏழைங்க காசைப் பிடுங்கிட வேவந்த
வியாபாரிகள் இடும் கூச்சல்களும்
ஊளை ஒழுக வாய் எச்சில் வடிய தன்
உள்ளத்தி லேபெரும் ஆசையுடன் - அம்மா
சேலை முந்தானையைப் பற்றிக்கொண் டேவரும்
செந்தா மரையோ சிணுங்கிடுவாள்
'சீவி முடிச்சி சிரிக்கலைன்ன, நல்லா
சிங்காரம் பண்ணி தளுக்கலைன்னா,
பாவிப்பய அரைப்பேருபோட்டான்? அவன்
பாடையிலே போக! மாடாக என்
ஆவி துடிக்கச் சுமந்து வந்தும், தினம்
அரைப் பேரு போட்டுல்ல வச்சிருக்கான்'
கேவி யழுது புலம்பிக் கொண்டே வரும்
குப்பாயி நெஞ்சில் பெருநெருப்பு
காமாச்சிக்கு எம்பத் தஞ்சிரூபா அவ
கையில பாத்தியாடி சுத்த
சோமாறி வேலைக்குப் போகமாட்டா, போனா
சொத்த வேலை, துப்புப் பட்டிடுவா
ஏமாளி கந்தன் அவ புருஷன் - அவ
இழுத்த இழுப்புக்கு வளையுறானே என
உரோமஞ் சிலிர்க்க வசைபாடும் - சின்ன
ருக்குமணிக்கோ, வயித்தெரிச்சல்
'சீட்டுப் பணத்த நான் கட்டுவேனா? பட்ட
சில்லற கடன அடைப்பேனா? அந்த
சேட்டுப் பயமலைபோல வந்து பெருந்
தொல்லை கொடுப்பான் கடன் கேட்டு,
ஈட்டுக் கடையில வச்ச நகையினை
இந்தமாசம் திரும்பலன்னா ஏலம்
போட்டுடுவானாம், என்ன செய்வேனென
புலம்பும் வள்ளிளொரு பக்கத்திலே
பள்ளிக்குடம் போகும் சின்ன மகளுக்கு
பாவாடை ரவிக்கை தைக்க வேணும்
வள்ளி, மகளின் சடங்குக்கு அஞ்சிரூ
வா, வாச்சும் மொய்யா எழுதிடணும்
கொள்ளைக்கா ரப்பய ஒத்த கடைக்கும்
கொடுத்திட னும்போன 'மாசக்கடன்'
உள்ளத்தில் எண்ணி அடுப்பரு கில் சும்மா
உட்கார்ந் திருக்கிறாள் பாப்பாத்தி
நாட்டுக்குப் போயி குடிச்சுப் புட்டு, சில
நாதாறிப் பசங்கள கூட்டிவந்து கரு
வாட்டுக் கறி வேணும் என்று, என்னையிந்த
மனுசன் புடுங்கியே தின்னப் போறான்
வீட்டுல என்ன சொகத்த கண்டேன்? இந்த
வெத்து மனுசன கட்டிக்கிட்டு என
நீட்டி முழக்கி வசைபாடும் சின்ன
நீலா வதிக்கோ பெருங் கோவம்
சம்பள நாளிது வீட்டி லிருக்கிற
சந்தோஷ மெல்லாம் பறந்திடும் நாள்
வம்பு தும்புகளும் பேசிடும் நாள், இவர்
மண்டை யுடைந்திடும் நாளிதடா!
கம்புத் தடிகளைத் தூக்கிடும் நாள், பொலிஸ்
கச்சேரி, கோட்டுக்குப் போயிடும் நாள்
வெம்பியழுதிடும் பெண்களின் குரல்கள்
வீடுகளில் கேட்கும் நாளிதடா!
அ) இக்கவிதையில் கூறப்படும் மலையகப் பெண்களின் ஏக்கங்கள் எவை?
ஆ) இக்கவிதை மூலம் வெளிப்படுத்தப்படும் அதிகாரத்தினரின் சுரண்டல்கள் எவை?
இ) கவிஞரின் எடுத்துரைப்பு முறைச் சிறப்புகளைக் கூறுக.
ஈ) 'சம்பள நாளிது வீட்டி லிருக்கிற சந்தோஷ மெல்லாம் பறந்திடும் நாள்' என்று கவிஞர் ஏன் பாடினார்?
அல்லது
'நம்ப சாஸ்திரம் ..ஆசாரம்! அப்படின்னா நீ என்ன பண்ணியிருக்கணும் தெரியுமா? என்னை என்ன பண்ணித்து தெரியுமா அந்த சாஸ்திரம்? ...அப்போ நீ பால்குடிக்கிற குழந்தையடா...எனக்கு பதினைஞ்சு வயசுடா! என் கொழந்தை என் மொகத்தைப் பாத்துப் பேயப் பாத்ததுபோல் அலறித்தேடா...! பெத்த தாய்க்கிட்டே பால்குடிக்க முடியாம குழந்தை கத்துவே கிட்டே வந்தா மொட்டையடிச்சு என்னைப் பார்த்து பயத்துல அலறுவே...அப்படி என்னை என் விதிக்கு மூலையில உட்காத்தி வச்சாளே அந்தக் கோரத்தை நீ ஏண்டா பண்ணலை கீதாவுக்கு?....ஏன் பண்ணலை சொல்லு?' என்று கண்களில் கண்ணீர் வடியக் கேட்கும் போது கணேசையரும் கண்களைப் பிழிந்துவிட்டுக்கொண்டார். அவள் தொடர்ந்து பேசினாள்.
'ஏண்டாப்பா உன் சாஸ்திரம் அவளைக் கலர்ப்புடைவை கட்டிக்கச் சொல்லித்தோ? தலையைப் பின்னிச் சுத்தீண்டு பள்ளிக்கூடம் போய்வரச் சொல்லித்தோ? தன் வயித்துக் தானே சம்பாதிச்சுச் சாப்பிடச் சொல்லித்தோ? இதுக்கெல்லாம் நீ உத்தரவு கேட்டப்போ நான் சரீன்னேன் ஏன்? ...காலம் மாறீண்டு வரது மனுசாளும் மாறணும்னுதான்! நான் பொறந்த குடும்பத்தில எண்டு சொல்லறயே எனக்கு நீ இருந்தா..வீடும் நெலமும் இருந்தது. அந்தக் காலமும் அப்படி இருந்தது. கீதா பண்ணின காரியத்தை மனசால கூட நினைக்கமுடியாத யுகம் அது. அப்போ அது சாத்தியமாகவும் இருந்தது. இப்போ முடியலியேடா...எனக்கு உன் நிலைமையும் புரியறது. நீ பிள்ளையும் குட்டியுமா வாழறவன் அதுகளுக்கு நாளைக்கு நல்ல காரியங்கள் நடக்கணும்....எனக்குப் புரியறது....அவளும் புரிஞ்சுதானே எழுதியிருக்கா..உன் சாஸ்திரம் அவளை வாழ வைக்குமாடா? அவளுக்கு வேணாமுன்னிட்டா ஆனா டேய் கணேசா...என்னை மன்னிச்சிக்கோடா எனக்கு அவ வேணும்..அவதாண்டா வேணும்.. எனக்கும் இனி என்ன வேண்டியிருக்கு. என் சாஸ்திரம் என்னோடயே இருந்து இந்தக் கட்டையோட எரியும். அதனாலே நீங்க நன்னா இருங்கோ. நான் போறன். கீதாவோடேயே போயிடறேன்!
அ)கௌரிப்பாட்டி கீதா உறவின் ஆழத்தை விளக்குக.
ஆ) கைம்மை நோன்பில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துக்காட்டுக.
இ) கௌரிப்பாட்டியின் காலமாற்றத் தெளிவு
ஈ) ஆசிரியரின் மொழிநடை
பகுதி II
3. வினைசெயல்வகை என்ற அதிகாரத்தில்
(அ) பொதுவகையால் வினைசெய்யும் திறம்
(ஆ) மூவகை நிலைகளும் அவற்றுள் வலியதன் சிறப்பும்
(இ) வலியான் , ஒப்பான் ஆகியோர் வினைசெய்யும் திறம்
ஈ) உவமை அணிப் பயன்பாடு ஆகியவற்றை விளக்குக.
4. தசரதன் கைகேயியின் கால்களில் விழுந்தது முதல் அவளுக்கு வரத்தைக் கொடுத்தது வரையான பகுதியில் ,
அ) தசரதன் இரத்தலும் கைகேயி மறுத்தலும்
ஆ) தசரதனின் பெருமையும் துன்பமும்
இ) கைகேயியின் கயமைகள்
உ) உவமை அணிகள் ஆகியவற்றை விளக்குக.
5. வீரமாமுனிவரின் தேம்பாவணி பைதிரம் நீங்குபடலத்தில் வானவர்களின் செயற்பாடுகள் வரையான பகுதியை அடிப்படையாகக் கொண்டு,
அ) மரியாளினதும் சூசையப்பரினதும் பெருமைகள்
ஆ) மரியாளினதும் சூசையப்பரினதும் துன்பங்கள்
இ)யேசுபாலனின் மகிமைகள்
ஈ) உவமை அணிப்பயன்பாடு ; ஆகியவற்றை விளக்குக.
6. தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் தமிழ்ச்செல்வாக்கு என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு,
அ) தமிழக பக்தி இலக்கியங்கள் தொலைகிழக்கு நாடுகளில் அடைந்துள்ள செல்வாக்கு
ஆ) தமிழகத்தின் அரசியல் பொருளாதார வலிமை தொலைகிழக்கு நாடுகளில் ஏற்படுத்திய பாதிப்பு
இ) இலங்கையில் தொன்று தொட்டிருக்கும் தமிழின் செல்வாக்கு
ஈ) ஆசிரியரின் மொழிநடை
7. செ.கணேசலிங்கனின் நீண்டபயணம் என்ற நாவலை அடிப்படையாகக்கொண்டு,
அ) யாழ்ப்பாணப் பண்பாடு
ஆ) செல்லத்துரையனுக்கும் மாதவனுக்கும் இடையிலான தொடர்பு நாவலில் ஏற்படுத்திய செல்வாக்கு
இ) செல்லத்துரையனுக்கும் வள்ளி - கற்பகத்துக்கும் இடையிலான தொடர்பு
ஈ) ஆசிரியரின் புனைதிறன்
8. பின்வருவனவற்றுள் எவையேனும் இரண்டினை விளக்குக.
அ) சீறாப்புராணத்தில் மழை நோக்கிய பிரார்த்தனைக்கான சூழ்நிலை
ஆ)என் இறைவன் கவிதையில் இறைவனின் பெருமைகள்
இ) ஒளி சிறுகதை குத்துவிளக்கான தன் மகளைக் குலவிளக்காக மாற்றுவதற்கான போராட்டம் என்பதை விளக்குக.
ஈ) பூக்காரி என்ற கவிதையின் பேசுபொருளும் அதன் எடுத்துரைப்புத் தனித்துவங்களும்